வீட்டிலே வளர்க்கலாம் நாட்டுக்கோழி... எளிமையான வழிகாட்டி..!
விவசாயம் (Agriculture) பொய்த்துப்போகும்போது கால்நடைகள் (Cattle Farming) காப்பாற்றும். ஆனால், தற்போதைய வரலாறு காணாத வறட்சி காரணமாக, தீவனம் (Livestock Feed) இல்லாமல் கால்நடைகளை காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கிறது. இதில் கால்நடைகள் நம்மை எப்படி காப்பாற்றும்? இந்த வறட்சியை சமாளித்து, ஓரளவு வருமானத்திற்கான (Income) வாய்ப்பை (Opportunity) கொடுப்பவை கோழிகள்தான்(Chicken). நாட்டுக்கோழிகள் வளர்த்து பல விவசாயிகள் (Farmers) கணிசமான வருமானம் பார்த்து வருகிறார்கள். நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மட்டும்தான் வளர்க்க முடியுமா? நிலமில்லாதவர்கள் வளர்க்க முடியாதா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. உண்மையில் வீட்டில் காலியிடம் (Backyard) இருந்தால் யார் வேண்டுமானாலும் நாட்டுக்கோழிகளை வளர்க்க முடியும்.
‘புறக்கடை கோழி வளர்ப்பு(Back Yard Poultry Rearing)’ என்ற பெயரில் நம்முன்னோர்கள் செய்து வந்ததுதான் இது. நகரம், கிராமம் என்ற வித்தியாசம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் கோழிகளை வளர்க்கலாம். நகரங்களில் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்றாலும் எல்லோராலும் வளர்க்க முடியாது. கோழி வளர்க்க, வீட்டை சுற்றி குறைந்தபட்சம் ஒரு சென்ட் அளவுக்காவது காலியிடம் இருக்க வேண்டும். நெருக்கமான குடியிருப்பு பகுதியாக இருக்கக்கூடாது. போதுமான ஆர்வமும், தினமும் கோழிகளை அக்கறையுடன் கவனிக்கும் மனநிலையும் கட்டாயம் இருக்க வேண்டும். புறக்கடை கோழி வளர்ப்பு முறையில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க முடியாது. குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை வளர்க்கும்போது, ஒவ்வொரு கோழிகளையும் தனித்தனியாக பராமரிக்க முடியும்.
புறக்கடையில் கோழி வளர்க்க நினைப்பவர்கள், முதலில் கோழிகளை வளர்க்கும் இடத்தை சுற்றி வேலியமைத்து கோழிகள் வெளியே செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டும். கோழிகளுக்காக தனியாக கொட்டகை அமைக்கத் தேவையில்லை. இரவில் கோழிகள் அமர்வதற்கு வசதியாக, நம்மிடம் இருக்கும் மரக்கொம்புகளை வைத்து பரண் போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் போதும். பரணின் மேல் பகுதியில் பழைய ஃபிளக்ஸ் போன்ற ஏதாவது ஒன்றை கட்டிவிட்டால், வெயில், மழையில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விடும். காகம், கழுகு போன்ற பறவைகளிடம் இருந்து கோழிகுஞ்சுகளை பாதுகாக்க, மேல் பகுதியில் மீன்வலை அல்லது நிழல்வலையை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சென்ட் இடத்தில் வலை பந்தல் அமைக்க, அதிகபட்சமாக 4500 ரூபாய் செலவாகும். பக்கவாட்டிலும், மேல்பக்கத்திலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துக்கொண்ட பிறகு, கோழிகளை வாங்கி வளர்க்கத் தொடங்க வேண்டும். ஆரம்பகட்டத்தில், பெரிய கோழிகளாக வாங்கி வளர்க்கலாம் அல்லது குஞ்சுகளாக வாங்கி வளர்க்கலாம். இதில், தரமான, நோயில்லாத பெரிய கோழிகளை வாங்கி வளர்க்கும் முறையில் உடனடியாக வருமானம் கிடைக்கும். தாய்க்கோழியாக வாங்கும் போது, நோய் தாக்குதல் இல்லாமல் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.
முதன்முதலில் கோழி வளர்ப்பில் ஈடுபடுபவர்கள், இருபது கோழிகளுடன் வளர்ப்பை தொடங்கலாம். இருபது கோழிகளுக்கு ஒரு சேவல் இருக்க வேண்டியது அவசியம். சேவல் நல்ல தரமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒரு தாய்க்கோழி சராசரியாக 650 ரூபாய் என வைத்துக்கொண்டாலும், இருபது கோழிகள் வாங்க, 13,000 ரூபாய் செலவாகும். ஒரு சேவல், இரண்டாயிரம் ரூபாய் ஆகும். ஆக மொத்தம் 15 ஆயிரம் ரூபாயில் கோழிகள் வாங்கி விடலாம். வேலி, நிழல்பந்தல் அமைக்க 10 ஆயிரம் ரூபாய், முட்டையிட, அடைகாக்க தேவையான அமைப்புகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய், இதர செலவுகள் ஒரு மூவாயிரம் ரூபாய் என வைத்துக்கொண்டால் மொத்தம் 33,000 செலவில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி வளர்ப்பை தொடங்கிவிடலாம்.
நாட்டுக்கோழிகளை வாங்கி வந்தவுடன், அவற்றை அடைத்து வைக்காமல், நாம் வேலி அமைத்துள்ள பகுதியில் அவற்றை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும். பெரிய கோழிகளாக இருப்பதால், சேவலுடன் சேர்ந்த அடுத்த சில நாட்களிலேயே முட்டையிடத் தொடங்கும். முட்டை வைப்பதற்கு கொஞ்சம் இருட்டான இடங்களைத் தேடும். அதற்காக வேலியோரம், காம்பவுண்ட் சுவர் ஓரம் அல்லது வீட்டு சுவர் ஓரத்தில் சிறிய பலகைகள் அல்லது கூடைகள் வைத்து செயற்கையாக ஒரு இருட்டை உருவாக்க வேண்டும். அந்த கூடைகளில் கொஞ்சம் வைக்கோல் அல்லது தென்னைநார் கழிவு போட்டு வைத்தால் முட்டை உடையாமல் இருக்கும். தினமும் கோழிகள் இடும் முட்டைகளை எடுத்து, அதில் மார்க்கர் மூலமாக தேதியை குறித்து வைக்க வேண்டும். முட்டைகளை கூடையில் வைத்து, அதில் அடைக்கு தயாரான கோழிகளை அமரவைக்க வேண்டும். 21 நாட்களில் முட்டை பொறியத் தொடங்கிவிடும். ஒரு கோழி மூலமாக வருடத்திற்கு 70 முட்டைகள் வரை கிடைக்கும். இதில் 20 முட்டைகள் சரியாக பொறிக்காமல் சேதாரமானாலும் 50 முட்டைகள் மூலமாக 50 குஞ்சுகள் கிடைக்கும். ஆக, ஒரு வருடத்தில் 20 கோழிகள் மூலமாக, ஆயிரம் குஞ்சுகள் வரை கிடைக்கும். ஒரு கோழிகுஞ்சு, 120 நாட்களில் ஒன்றரை கிலோ வரை எடை இருக்கும். சராசரியாக ஒரு கிலோ எடை இருப்பதாக வைத்துக்கொண்டாலும், ஒரு வருடத்தில் ஆயிரம் கிலோ கோழிகளை உற்பத்தி செய்ய முடியும். ஒரு கிலோ நாட்டுக்கோழி உயிர் எடையாக 850 ரூபாய் வரை விற்பனையாகிறது. சராசரியாக கிலோ 750 ரூபாய் என வைத்துக்கொண்டாலும், ஆயிரம் கிலோவுக்கு 750,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இது ஒரே முறையில் கிடைத்துவிடாது. வருடம் முழுவதுமான வருமானம். இந்த வருமானத்தில் தீவனம், மருந்து, பராமரிப்பு என 150,000.00 ரூபாய் செலவானாலும் 600,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். தோராயமாக ஒரு மாதத்திற்கு 45,000 ரூபாய் வருமானமாக் கிடைக்கும். முறையான பராமரிப்பும் கவனிப்பும் இருந்தால் தான் இந்த வருமானம் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
கோழிகளுக்கு தீவனத்திற்காக அதிகம் செலவழித்தால் லாபம் குறையும். வீட்டில் எஞ்சிய பழைய உணவுகளை கொடுக்கலாம். கழிவு தானியங்களை வாங்கி மொத்தமாக அரைத்து வைத்துக்கொண்டு கோழிகளுக்கு கொடுக்கலாம். புறக்கடையில் கரையான்களை உற்பத்தி செய்துக்கொடுக்கலாம். கீரை விதைகளை விதைத்து கோழிகளை கொத்தி திங்க வைக்கலாம். இதுப்போல சிக்கனமான முறையில் தீவனம் கொடுத்து வளர்த்தால் நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல லாபகரமான தொழில்தான் என்பதில் ஐயமில்லை. இது தொடர்பான பயிற்சியை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் வழங்குகின்றன. அவர்களின் ஆலோசனையின்படி புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பை தொடங்கலாம்.
கோழிகளுக்கு தீவனத்திற்காக அதிகம் செலவழித்தால் லாபம் குறையும். வீட்டில் எஞ்சிய பழைய உணவுகளை கொடுக்கலாம். கழிவு தானியங்களை வாங்கி மொத்தமாக அரைத்து வைத்துக்கொண்டு கோழிகளுக்கு கொடுக்கலாம். புறக்கடையில் கரையான்களை உற்பத்தி செய்துக்கொடுக்கலாம். கீரை விதைகளை விதைத்து கோழிகளை கொத்தி திங்க வைக்கலாம். இதுப்போல சிக்கனமான முறையில் தீவனம் கொடுத்து வளர்த்தால் நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல லாபகரமான தொழில்தான் என்பதில் ஐயமில்லை. இது தொடர்பான பயிற்சியை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் வழங்குகின்றன. அவர்களின் ஆலோசனையின்படி புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பை தொடங்கலாம்.
No comments